சென்னை: இதுகுறித்து ஆர்.சி.எச் ஒப்பந்த சுகாதார தூய்மைப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சாந்தி கூறியதாவது, "தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005 ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.எச் திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் 3,140-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
மாதம்தோறும் 1,500 ரூபாய் என்ற மிக மிகக் குறைவான தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. நாள் தோறும் தொடர்ந்து 12 மணிநேரம், வாரவிடுமுறை மற்றும் அரசு விடுமுறை கூட இல்லாமல் பணிசெய்ய வைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், பொருளாதார ரீதியில் வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள்.
இவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, வார விடுமுறை, அரசு விடுமுறை, இலவச சீருடை, இலவசப் பேருந்து பயண அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.