தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2021, 10:37 AM IST

Updated : Jun 19, 2021, 2:39 PM IST

ETV Bharat / state

'மருத்துவர் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுங்க' - மருத்துவர்கள் சங்கம்

மருத்துவர் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவர்கள் சங்கம்
மருத்துவர்கள் சங்கம்

தூத்துக்குடி:இந்திய மருத்துவ சங்கம் தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில் மருத்துவர்கள் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் அருள்ராஜ் பேசுகையில், ''பொதுவாக எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கும் தினத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வதுண்டு. ஆனால், கரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஊடகங்கள் வழியாக, இந்த நாளை மக்களுக்கு எடுத்துச் செல்கிறோம்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் அருள்ராஜ்.

உயிரைக் காப்பாற்றுகின்ற பணியில் மருத்துவர்கள் ஈடுபடுகின்ற வேளையில் மருத்துவர்கள், செவிலியர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

இந்திய அளவில் உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஏன் தமிழ்நாட்டில் கூட மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்படவே எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. கரோனாவால் இந்திய அளவில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பணியின் போது மருத்துவர்களுக்கு பாதுகாப்புக் கருதியே, மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நிச்சயமாக மருத்துவச் சட்டத்தில் மருத்துவர்களின் பணிப் பாதுகாப்பு எனத் தனியாக சட்டத்தை திருத்துவோம் என உறுதி அளித்திருந்தார். அதன்படி ஓட்டெடுப்பும் நடத்தப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அது சட்டம் ஆக்கப்படவில்லை. இதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கரோனாவுக்கு எதிரான போரில் அரசு, தனியார் துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தடுப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக பல உயிர்கள் உயிரிழக்க நேரிடுகின்றன. ஆனால், இவை அனைத்தையும் 40 நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒருங்கிணைத்து வெற்றி கண்டுள்ளார். இதற்காக அவரை குடிமகன் என்ற முறையில் நான் மனதாரப் பாராட்டுகிறேன்'' என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி இந்தியன் மருத்துவச் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் குமரன், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருள்பிரகாஷ், மாவட்ட பொருளாளர் சிவசைலம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் வனவிலங்குகளுக்கு கரோனா இல்லை - அமைச்சர் கா. ராமச்சந்திரன்

Last Updated : Jun 19, 2021, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details