தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை 50 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தினர் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருந்ததாவது, "கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக தனியார் பள்ளிகள் தொடர்வதற்கான அங்கீகாரத்தை மே 31ஆம் தேதிக்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட வேண்டும். பள்ளிப் பேருந்துகளை இயக்குவதற்கான காலத்தை ஓராண்டு மேலும் நீட்டித்து உத்தரவிட்டு, பள்ளி வாகனங்களுக்கு ஆண்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் வாங்கக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாது. எனவே, தகுதி படைத்த பெற்றோர்களிடமிருந்து கட்டணங்களை பெற்றுக்கொள்ள அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகள் பல்வேறு நிர்வாக சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், கல்விக் கட்டணங்களை 50 விழுக்காடு உயர்த்தி வழங்க கட்டண நிர்ணயக் குழுவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுவது போல் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக புத்தகங்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என அதில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம்' - அரசுக்குப் பரிந்துரை