தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பணிக்காக வாகனம் ஓட்டுபவர்கள், வாக்குப் பெட்டிகளை கொண்டுச் செல்லும் கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் பால், காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கொண்டுச் செல்பவர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்களிக்க உரிமை வழங்க வேண்டும் என தமிழக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு தேவையென்றால் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு தபால் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய வாகன ஓட்டுநர்கள் சங்க தலைவர் ஜூட் மேத்யூ, "தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள், அத்தியாவசிய பணிகள் உள்ளிட்டவற்றில் ஐந்து லட்சம் ஓட்டுநர்கள் பணியாற்றுகின்றனர். இதுநாள் வரை அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கவிலக்லை.
தேர்தல் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் ஓட்டுநர்கள் கூட பணிக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளதால் வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது. அதேபோல், அரசுப் பணியில் இருக்கும் சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள், சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்களுக்கும் தபால் வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் எங்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளோம், ஆனால் சாதகமான முடிவு வரும் என தெரியவில்லை. இந்த விவகாரத்தில் மேலும் சில நாட்களுக்கு காத்திருக்கலாம் என நினைக்கிறோம். அதன்பின், நாங்கள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம். தேர்தலில் ஓட்டுநர்கள் வாக்களிக்காமலே போவதால் அரசியல் கட்சிகளிடம் இருந்து எங்களுக்கு தேவையான கோரிக்கைகளை வலியுறுத்த முடியவில்லை" என்று கூறினார்.