சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான வெங்கடேசன் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலகம் மற்றும் அமைச்சுப் பணி தலைமை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களில் பெரும்பாலானோர் சென்னையின் அண்டை மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் அலுவலகம் வந்து செல்ல மின்சார ரயில் போக்குவரத்து, மாநகர பேருந்தினை நம்பி உள்ளனர். அலுவலக நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் என்பது அதிகமாக உள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது.
தற்போதைய நிலையில், ஏறத்தாழ 100க்கும் அதிகமான தலைமைச் செயலகப் பணியாளர்கள் மட்டுமல்லாது , தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமைச் செயலக பிரதான கட்டடத்தில் உள்ள பொது, நிதி, வருவாய், உள் மற்றும் பணியாளர் (ம) நிர்வாகச் சீர்திருத்தத் துறைகளிலும் சட்டமன்றப் பேரவைச் செயலகத்திலும், அரசின் விதிமுறைகளின்படி தகுந்த இடைவெளியினை பின்பற்றி பணியாற்றுவது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. இதைப்போன்ற இட நெருக்கடி என்பது சென்னையில் பல துறைத் தலைவர் அலுவலகங்களில் உள்ளது . இதனால் கடுமையாக தொற்று பரவும் அபாயம் உள்ளது.
கடந்த ஆண்டில் கரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, 50 சதவீத பணியாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றிட அரசு ஆணையிட்டது. தற்போது, கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பாதிப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு ஊழியர்களை 50 சதவீதம் என சுழற்சி முறையில் பணியாற்றிட உத்தரவிட வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.