இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் நாள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசிகளைப் போடுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நீட் தேர்வு மையங்களை உருவாக்கிட வேண்டும்.
தேர்வு மையங்களின் நுழைவாயிலில் மாணவ மாணவிகளின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில், கெடுபிடியான பரிசோதனைகளுக்குள்படுத்துவதைத் தடுத்திட வேண்டும்.
பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் நீட் விண்ணப்பக் கட்டணத்தை ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும்.
மாவட்டத் தலைநகரங்களிலும் நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, தேசிய தேர்வு முகமை, தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பயிற்சி மையங்களை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் மாநிலங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து விலக்கு வழங்கிட வேண்டும். நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் தவறுகள், குளறுபடிகள் நடக்காமலும், முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை நடைபெறாமலும் தடுத்திட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு 87.1% பேர் எதிர்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்