சென்னை: நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தீர்மானம் நிறைவேற்றியது. இதற்காக அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து, இன்று (செப். 28) முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவிற்கே வழிகாட்டியாக தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததற்கும், ஆட்சி பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை அறிவித்ததிற்கும் முதலமைச்சரை சந்தித்து மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளோம்.
பாராட்டு விழா நடத்த தேதி கேட்பு
கடந்த 2016ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல், பெரும் மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் கூட்டுறவு வங்கி கடனைக் கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
இதனையடுத்து முன்னர் ஆட்சிப் பொறுப்பிலிருந்த அரசு, குறுகிய கால கடன்கள் அனைத்தையும் மத்திய கால மாற்று கடனாக (CMT) மாற்றியது. இது தொடர்பான கடன் இன்றும் அனைத்து விவசாயிகளுக்கும் நிலுவையில் உள்ளது. தற்போது வழங்கப்படவுள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில், இந்த மத்தியகால மாற்று கடனை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.]
மேலும் வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக, அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடத்த அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்தோம். அதற்கு முதலமைச்சர் ஜனவரியில் கண்டிப்பாக தேதியை உறுதி செய்து தருவதாக தெரிவித்துள்ளார்” என்றார்.
இதையும் படிங்க:”ரவுடி ஹெச். ராஜாவை குண்டர் சட்டத்தில் போட வேண்டும்” - வன்னி அரசு