கனமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளன. அரசு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனத் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மற்றும் மாநில அவசர கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கடந்த அக்டோபர் 1 முதல் நேற்றுவரை (நவம்பர் 18) தமிழ்நாட்டில் 480.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 61 விழுக்காடு கூடுதல் ஆகும்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
மாநில சராசரி 28.9 மி.மீட்டராகவும், திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 64.71 மி.மீட்டராகவும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாடு கடலோரப் பகுதியில் நிலைகொண்டிருந்தது.
இது மேற்கு, வட மேற்குத் திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 19) காலை சென்னைக்கு அருகில் கரையைக் கடந்தது.
நவம்பர் 19: திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யும்.
சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
உபரி நீராக முக்கிய நீர்த்தேக்கங்களான செங்குன்றத்திலிருந்து இரண்டாயிரத்து 156, சோழவரம் ஏரியிலிருந்து 700, செம்பரம்பாக்கத்திலிருந்து இரண்டாயிரத்து 111, பூண்டியிலிருந்து ஏழாயிரத்து 21 கன அடியும் திறந்துவிடப்படுகிறது.
ரூ. 2,629.29 கோடி ஒதுக்கீடு?
அக்டோபர், நவம்பர் மாதத்தில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாகப் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதங்கள் முதல்நிலை மதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி தற்காலிகச் சீரமைப்புக்கு ரூ.549.63 கோடியும், நிரந்தரச் சீரமைப்புக்கு ரூ.2,079.86 கோடியும் என மொத்தம் ரூ.2,629.29 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கிடையாது; ஆனால்...' - பாலச்சந்திரன்