தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு தாக்கல் செய்த மனுவில், ”கரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4,000 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இந்த உதவித் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
கரோனா பேரிடர் காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள், தங்கள் மருத்துவத் தேவைகளையும், வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்ய கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள போதும், 11,499 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளதாகவும், 2,541 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் அட்டைகள் உள்ளதாகவும் கிரேஸ் பானு தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவிய போது ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போது 6,553 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், 4,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அவரது மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.