சென்னை:தியாகராயநகரில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாமினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “25ஆவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. 12 முதல் 14 வயதுள்ள 21 லட்சம் நபர்கள் உள்ளனர். அவர்களில் 3 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
15 முதல் 18 வயதுள்ளவர்களில் 33 லட்சம் நபர்களில் 28 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 18 வயதிற்கும் மேற்பட்ட 5 கோடியே 78 லட்சம் நபர்களில் 5 கோடி 32 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி 5 கோடி 61 லட்சம் நபர்கள் செலுத்தியுள்ளனர்.
இரண்டு தவணை தடுப்பூசியை 1 கோடியே 34 லட்சம் நபர்கள் செலுத்திக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் 51 லட்ச பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 76 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 3ஆயிரத்து 100 ஊராட்சிகள் 100 விழுக்காடு செலுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இன்னும் 9 ஆயிரம் ஊராட்சி தலைவர்கள் முதலமைச்சரின் பாராட்டு சான்றிதழ் பெறும் வகையில் 100 விழுக்காடு தடுப்பூசியை செலுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 121 நகராட்சிகளில் 25 நகராட்சிகள் 100 விழுக்காடு இலக்கை எட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 98 விழுக்காடு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.