அதில், "என் உயிரினும் உயிரான மருத்துவத்துறை சொந்தங்களே! இது சத்தியமாக உங்களுக்கான பதிவு! உங்களுக்கு மட்டுமான பதிவு!
உருக்கமான, நெருக்கமான பதிவு! அரசியல் வாடையுடன் எழுதப்பெற்ற பதிவு, ஏனெனில் நம்ம டிசைன் அப்படி! அப்பதான் நம்மாளு கேட்பான்! ஏன்னா? நம்ம டிசைன் அப்படி! உலகெங்கும் உலுக்கி போட்ட “கரோனா“ நம்மை ரொம்ப சாதாரணமாகதான் அனுகியது, பல கருனைகளையும் காட்டியது.
ஆனால் இனி அப்படி இருக்க போவதில்லை என்பதை நடக்கும் சம்பவங்கள் நன்றாகவே காட்டுகின்றன. யாருக்கு தெரிகிறதோ இல்லையோ, ஆனால் நமக்கு இது நம் கண் முன்னே நடக்கிறது. அதுவும் நம்மை நோக்கியே நடக்கிறது. ஏனென்றால், வெளியே சாதாரணமாக சுற்றுபவர்கள் பாதிப்பு அடையும் போது நம்மிடம்தான் வருகிறார்கள்.
ஆனால் வெளியிலிருப்பவர்களுக்கு அது தெரியாது. அவர்களிடம் இருந்து ஒரு நபரோ ஒரு கூட்டமோ பிரிந்து சென்றால் கூட அது தெரியாது, அவர்களை குற்றம் சொல்லி ஒன்னும் இல்லை, நம்ம மக்கள் நெருக்கம் அப்படி!. விதி வலியது, அதை விட கரோனா கொடியது! சாதாரணமாக சுற்றும் அனைவரும், அவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களும், பெரியவர்களும், பிஞ்சுக் குழந்தைகளும் கடைசியாக நம்மிடம்தான் வருகிறார்கள்.
முன்பு போல இல்லை இப்போது, அறிகுறி வந்து ஓரிரு நாள்களில் மூச்சு திணறி காற்றுக்காக ஏங்கி, ஏங்கி இறுதி மூச்சை விடும்போது நமது மூச்சு ஒவ்வொரு தடவையும் நின்று வருகிறது. ஒரு தடவை வைரஸோடு வந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், நித்தம் நித்தம் வைரஸ் பாதிப்பை நேரடியாக கையாளும் நமது நிலைமை?. காற்றின் நிறைவான அளவு (saturation) நமக்கு குறைவது தெரியாமலேயே போகும் நிலைமை! இறுதியில் செயற்கை சுவாசம் மட்டுமே.
உங்கள் பாதுகாப்பு முழுவதும் உங்களை காக்கும். அலட்சியம் வேண்டாம் . அருகில் யாரும் பேச வர வேண்டாம். கூடிப் பருக வேண்டாம். கூட்டாஞ்சோரு வேண்டாம். தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தனியாக இருக்கப் பழகி கொள்ளுங்கள். நீங்கள்தான் இப்போது இந்த அப்பாவி மக்களுக்கு தேவை. கொத்து கொத்தாக பாதிக்கப் போகிற இந்த அப்பாவி மக்களை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. நம்மை விட்டால் நமது குடும்பத்திற்கும் யாரும் இல்லை என்ற சுயநலம் இங்கு வேண்டும்.