இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்துக் கழகத்தைச் சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன். வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் தமிழ் திருநாட்டின் வாக்காளர் பெருமக்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது.
தமிழ்நாடு பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன். இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்று கூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.