இந்திய உணவுக்கழகம் கூடுதல் இலவச அரிசி வழங்கத் தொடங்கியது என்று அதன் செயல் இயக்குநர் R.D.நஸீம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'பிரதம மந்திரியின் ஏழைகள் நலன்காக்கும் உணவு வழங்கும் திட்டத்தின் (PMGKAY) 2ஆவது கட்டமாக, இலவச கூடுதல் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC), இந்திய உணவுக்கழக கிடங்குகளில் இருந்து எடுக்கத் தொடங்கியுள்ளது. முதல்நாளான நேற்று(ஜூலை 10) 2006 டன் அரிசி விநியோகத்திற்காக எடுத்துள்ளது.
இவை பயனாளிகளுக்கு இன்றிலிருந்து ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும். நாடுதழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக, ஏழைகளுக்கு உணவுதானியம் கிடைக்கும் வண்ணம், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் முதற்படியாக இந்த ஆண்டின் ஏப்ரலிலிருந்து ஜூன் மாதம் வரை, தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ரேசன் மூலமாக உணவு தானியங்களைப் பெற்றுக் கொண்டிருந்த 80 கோடி மக்களுக்கு, மேலும் கூடுதலாக மாதத்திற்கு 5 கிலோ அரிசி வீதம் மூன்று மாதங்கள் இலவசமாகப்பெறும் வகையில், மத்திய அரசு "பிரதம மந்திரியின் ஏழைகள் நலன்காக்கும் உணவு வழங்கும் திட்டத்தினை"(PMGKAY) அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ், இதுவரை 120 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள், ரேசன் கடைகள் மூலமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் இப்பொழுது மேலும் 5 மாதங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 201 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவுதானியங்கள் நாடு முழுவதும் கூடுதலாக விநியோகிக்கப்படும்' என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ' இந்திய உணவுக் கழகம் (FCI - Food Corporation India) வழக்கமாக மாதம் 2.93 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை ரேசன் கடைமூலமாக விநியோகத்திற்காக வழங்கி வருகிறது. கரோனா காலத்தில் பிரதம மந்திரியின் ஏழைகள் நலன்காக்கும் உணவு வழங்கும் திட்டத்தின் (PMGKAY) கீழ், தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 1.78 லட்சம் மெட்ரிக் டன் வீதம் மூன்று மாதத்திற்கும் மொத்தமாக ரூ. 2001 கோடி மதிப்புள்ள 5.34 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை பொது விநியோகத்திற்காக வழங்கியுள்ளது.