சென்னை:பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மேல்நிலை வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் தொடங்கலாமா என்று ஒன்றிய, மாநில அரசுகள் ஆலோசித்துவருகின்றன. மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளும் படிப்படியாகத் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆரம்ப பள்ளிகளை முதலில் திறக்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு விரைந்து கல்வி புகட்ட வேண்டும் என்பதில் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் பெரிதும் ஆர்வத்துடன் உள்ளனர். சமீபத்தில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் முதலில் ஆரம்பப்பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளது.