தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் திறக்க தயாராகும் பள்ளிகள்.. சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்! - chennai news

Chennai school reopen: புயல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Intensity of school renovation work
பள்ளிகள் சீரமைக்கும் பணி தீவிரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 5:00 PM IST

சென்னை:திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலுக்குப் பின்னர் வரும் 11ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்படி, பள்ளிகள் திறப்பதற்கு முன் தலைமை ஆசிரியர்கள் இன்று (டிச.08) முதல் பள்ளிகளுக்குச் சென்று, பள்ளிகள் திறக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகள் சீரமைப்புப் பணிகளை கண்காணிக்க சென்னை மாவட்டத்திற்கு இணை இயக்குனர்கள் நரேஷ், செல்வக்குமார், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இணை இயக்குனர்கள் பொன்னையா , செல்வக்குமார், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இணை இயக்குனர் அமுதவல்லி, திருவள்ளுர் மாவட்டத்திற்கு இணை இயக்குனர் ராமசாமி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இணை இயக்குனர் பொன்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு, பள்ளிகள் சீரமைப்பு பணிகளை கண்காணித்து திறப்பதற்கு தயார் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, சென்னை அசாேக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை இன்று (டிச.08) நேரில் சென்று ஆய்வு செய்தார். அதேபோல் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அயனம்பாக்கம் தொடக்கப்பள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள பள்ளிகளையும் ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும் போது நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தருதலை உறுதி செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பள்ளி வளாகம் முழுமையாக தூய்மை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பள்ளி வளாகத்தில் இருக்கும் உடைந்த பொருட்களையும், கட்டிட இடிபாடுகளையும் அகற்றும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருப்பின், மாணவர்கள் அதுபோன்ற கட்டிடங்களை நெருங்காமல் இருக்க, கட்டிடங்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும், அறைகளையும் துாய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

வகுப்பறைகளில் உள்ள கதவு, ஜன்னல், பெஞ்ச், டெஸ்க் போன்றவற்றை சரி செய்து வர்ணம் பூச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பூஞ்சைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணியும் தொடர்ந்து நடக்கிறது. இதில், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை முழுவதும் ஆய்வு செய்வதுடன், கழிவறைகளின் கதவுகளை சரிசெய்து, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து, விளையாட்டுத் திடல்கள் மேடு பள்ளங்கள் இன்றி சமன்படுத்தி, பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டு வருகின்றன. குடிநீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்டவை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு வசதியான மற்றும் காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்கித் தரும்பொருட்டு, வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் மின்விசிறி, மின்விளக்கு மற்றும் மின் இணைப்பு ஏதேனும் இருப்பின் அவற்றை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான நிலையில் உள்ளதை உறுதி செய்யப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, சத்துணவு சமைக்கும் இடங்கள் வெள்ளையடிக்கப்பட்டு, அடுப்புகளும் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல், மழையினால் பாதிக்கப்பட்டு, உடமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மணலி பகுதியில் வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம்: நாளை அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details