சென்னை: ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 2008ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பணிகள் நடைபெறும்போது முதலமைச்சராக இருந்து கருணாநிதியும் நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார்.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்து முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 102-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதியன்று அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. 3.75 லட்சம் சதுரடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. இந்த நூலகத்தை 2011ஆம் ஆண்டு திமுகவின் ஆட்சி மாறியதும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என முடிவு எடுத்தார்.
இதற்குப் பல்வேறு தரப்பிலும் கடும் ஆட்சேபனை செய்தனர். மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றக்கூடாது என உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி தொடர்ந்து நூலகம் செயல்பட்டு வந்தது. ஆனால், அதனை சரியாகப் பராமரிக்காமல் இருந்தனர். இதனால் நூலகத்தின் அரங்கம் மூடப்பட்டும், திறந்தவெளியில் அமைக்கப்பட்ட அரங்கம் பயன்பாடு இல்லாமலும் கிடப்பில் போடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பராமரிப்புப்பணிகள் கடந்த ஆட்சியில் செய்யப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த உடன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முழுவதும் புனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 8 தளங்களிலும் மின்சார வயர்களை மாற்றுவது, ஏசியை சரி செய்வது, பழுதடைந்த பகுதிகளை சீர் செய்வது, முகப்புப்பகுதிகளை புனரமைப்பது போன்றப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதியாக ரூ.37.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.