சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரான மாடம்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் கே. முத்துக்குமரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் ஏரி காஞ்சிபுரம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
ஆனால் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் இந்த ஏரியில் குப்பைகளை கொட்டி மாசுப்படுத்தி வருகிறது. டன் கணக்கில் சேரும் திடக்கழிவு மாசுக்களால் இந்த ஏரியை சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்துவருகின்றனர். மேலும், ஏரியில் குப்பைகளை கொட்டுவதால் நீர் மாசடைவதுடன், குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் காற்றும் மாசடைகிறது.
மழைக்காலங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பலவித நோய்கள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. தற்போது கரோனா காலகட்டத்தில் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இங்கு பஞ்சாயத்து நிர்வாகமே குப்பைகளை கொட்டுவது என்பது பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.
அதனால், ஏரியில் குப்பைகளை கொட்ட தடை விதிக்க வேண்டும் என சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்காமல் இருக்க சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பைகளை கொட்ட தடை விதிக்க வேண்டும்” என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த ஜூன் மாதம் விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சித்தாலப்பாக்கம் ஏரியில் பஞ்சாயத்து நிர்வாகம் குப்பைகளை கொட்டக்கூடாது என தடை விதித்து, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், மனுதாரரான டாக்டர் கே.முத்துக்குமரன் தாக்கல் செய்திருந்த கூடுதல் மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும், நீதிமன்ற உத்தரவை மீறி பஞ்சாயத்து நிர்வாகம் அதே ஏரியில் மீண்டும் குப்பைகளை கொட்டி ஏரியை மாசுபடுத்திவருகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இதனை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம். சிலம்பரசனும், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஏ. ஸ்ரீஜெயந்தி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சித்தாலப்பாக்கம் ஏரியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை பஞ்சாயத்து நிர்வாகம் 4 வாரங்களில் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
இந்தப் பணியை மெத்தனப் போக்குடன் செய்யாமல் எடப்பாடி, நாமக்கல், ராசிபுரம், குமாரப்பாளையம் நகராட்சிகள் குப்பைகளை எவ்வாறு திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றி சிறப்பாக அறிவியல் பூர்வமாக அப்புறப்படுத்தி வருகிறதோ, அதேப்போல சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும்.
இந்தப் பணிகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி செய்து முடித்தது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் நகராட்சி ஆணையர், சித்தாலப்பாக்கம் பஞ்சாயத்து சிறப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.