சென்னைவிமான நிலையத்திலிருந்து ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு என்.இ.பி.சி., கிங்பிஷர், ஜெட் ஏா்வேய்ஸ், டெக்கான் ஏா்லைன்ஸ் மற்றும் பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களைச் சோ்ந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில் இல்லை.
இதில் டெக்கான் ஏா்லைன்ஸ் மற்றும் பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் ஏதும் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை. ஆனால் என்.இ.பி.சி, கிங்பிஷா் மற்றும் ஜெட் ஏா்வேய்ஸ் ஆகிய விமான நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத 12 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் நான்கு என்.இ.பி.சி. விமானங்கள், ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஆகிய ஐந்து விமானங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டில் முறைப்படி தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்றன.
முக்கியமாக விமானங்களை உடைத்து அப்புறப்படுத்தும்போது அதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படாத நிலையில் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 விமானங்களில் 2 விமானங்களை அப்புறப்படுத்தும் பணி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அப்போது பயன்படுத்தும் நிலையில் இருக்கும் எஞ்சின் உட்பட தொழில் நுட்ப கருவிகள் மற்றும் முக்கியமான பாகங்கள் தனியே பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட விமான பாகங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
இந்நிலையில் தற்போது மீதமுள்ள பழைய விமானங்களையும் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளை அந்தந்த விமான நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.