தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற உத்தரவுபடி லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; மீனவர்கள் கோரிக்கை என்ன? - D5 காவல் நிலையம்

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அப்போது மீனவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 12, 2023, 12:33 PM IST

சென்னை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்… மீனவர்கள் கோரிக்கை என்ன?

சென்னை: கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

அதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் கடைகளை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை கோரியுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள் மாநகராட்சி சார்பில் எத்தனை நபர்களுக்கு கடைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் ஏப்ரல் 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

D5 காவல் நிலையம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று அகற்ற திட்டமிட்டுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் படி மாநகராட்சி மண்டலம் ஒன்பது உடைய உதவி செயற்பொறியாளர் D5 காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் நேற்று உயர்நீதிமன்ற உத்தரவு படி மாநகராட்சி அதிகாரிகள் காலை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர். பாதுகாப்பு பணிக்காக கிட்டத்தட்ட 50 மேற்பட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர். சாலையோரத்தில் இருந்த ஐஸ் பெட்டி, வலைகள், மேசைகள் உள்ளிட்டவையை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அங்கு மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்த மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்றினர். இதனை கண்டித்து மீனவ மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலையின் அருகில் அமர வைத்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மீன் விற்பனை செய்ய அங்காடி திறக்காமல், கடைகளை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பட்டினப்பாக்கம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவில் சுமார் ஒன்பது கோடி ரூபாய் செலவில் அதிநவீன மீன் சந்தை( விற்பனையகம்) மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனியார் வங்கியில் நகை கொள்ளையடித்த வழக்கில் கைதானவரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details