மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்குக்கு திரையுலத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்த வகையில், இலங்கையைத் தமிழரான கானா பிரபா என்பவர் பகிர்ந்துள்ள இரங்கல் செய்தி அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில், “இயக்குநர் சிகரத்தின் வழியான அறிமுகம்தான், ஆனால் அதற்குப் பின்னான பயணத்தில், பத்தோடு பதினொன்றாக கவனிக்கப்படாத துணை நடிகர் கூட்டத்திலும்கூட ஒருவராக இருந்து, ஒரு திருப்புமுனை வரை காத்திருந்து அந்த நம்பிக்கையை பலிக்க வைத்தவர். தான் கடந்து வந்த பாதையைப் போல் பின்னாளில் துணை நடிகர் கூட்டத்துகே ஒரு அடையாளத்தை நிறுவியவர். அதனால்தான் மயில்சாமி God Father என்று இவரை வாயாரப் புகழ்வார்.
’புதுப்புது அர்த்தங்கள்’ காலத்திலேயே (மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும்) ஊன்றிக் கவனித்து ரசித்த நகைச்சுவை நடிகன், போன வாரம் வரை ’தூள்’ படத்தின் விவேக் நகைச்சுவைப் பகுதியைப் போட்டுப் பார்ப்பதில் ஒரு மன நிறைவு.