சென்னை: வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி கனமழை பெய்தது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், பால் பவுடர், குடிநீர் பாட்டில்கள் மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், தற்போது 2 வாகனங்களின் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்ததாவது, "சென்னை மாநகராட்சியின் சார்பில், கனமழையினால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பொருட்டு 100 மோட்டார் பம்புகள் அனுப்புகின்ற வகையில், முதற்கட்டமாக 100 எச்.பி. திறன் கொண்ட 12 டீசல் பம்புகள், 50 எச்.பி.க்கு கீழ் திறன் கொண்ட 29 டீசல் மோட்டார் பம்புகள் மற்றும் 30 மின் மோட்டார் பம்புகள் என மொத்தம் 71 மோட்டார் பம்புகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மேலும், 29 மோட்டார் பம்புகள் அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அதி கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரொட்டி, பிஸ்கெட், பால் பவுடர், குடிநீர் பாட்டில்கள் மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், தற்போது 2 வாகனங்களின் மூலம் அனுப்பப்படுகிறது.