சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம், கொரட்டூர், பாடி பகுதிகளில் இரும்புத் தொழிற்சாலைகள், வாகன உதிரிப் பாகங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என 1,000 கணக்கான குறு, சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த வாரம், மிக்ஜாம் புயலால் சென்னை பெருநகரமே பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அந்த வகையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் உள்ள கொரட்டூர், பட்டரவாக்கம் ஆகிய தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ள நீரானது சூழ்ந்தது. இதனால், அங்குள்ள உற்பத்தி தொழிற்சாலைகள் பாதிப்பைச் சந்தித்தது.
இது குறித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அரவிந்த் கூறுகையில், "அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை என்பது மிகப்பெரிய தொழிற்பேட்டை ஆகும். இதில், சுமார் 2,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
ஒவ்வொரு முறையும் மழை வரும் போதும், வடக்கு தொழிற்பேட்டை பகுதியில் தண்ணீரானது தேங்கும். ஆனால், இம்முறை அனைத்து இடங்களிலும் 4 அடி முதல் 6 அடி வரை வெள்ளம் நீரானது தேங்கியுள்ளது. இதன் காரணத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வெள்ள நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..!
கடந்த முறை வெள்ளம் வரும் போதே, சுவரின் உயரம் அதிகரித்து தண்ணீர் புகாத அளவிற்குப் பாதுகாப்பு இருக்க வேண்டுமென அனைத்து தொழிற் நிறுவனங்களும் அறிவுறித்தினோம். இம்முறை அம்பத்தூர் ஏரியிலிருந்து அதிக அளவில் உபரி நீரானது வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில், அதிகமாக வெள்ளம் சூழ்ந்தது.
பல நிறுவனங்களின் உற்பத்தி இயந்திரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து இயந்திரங்களும் எலக்ட்ரோ மெக்கானிக்கல் இயந்திரங்கள் ஆகும். வெள்ள பாதிப்பால் எங்களுக்கு சுமார் ரூபாய் 2000 கோடி வரை நஷ்டமடைந்துள்ளது.
மேலும், கொரட்டூர் பகுதியில், நீர் வெளியேறும் கால்வாயை அகலப்படுத்த பொதுப்பணித்துறையிடமும், பெருநகர சென்னை மாநகராட்சியிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல், பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் நிவாரணத்திற்காக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த நிவாரணத் தொகையானது அவர்களின் ஆண்டு வருவாய் மற்றும் அவர்கள் செலுத்தும் ஜி.எஸ்.டி தொகை எனக் கணக்கிட்டு அதன்படி நிவாரணம் வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க:குழந்தையின் உடலை அட்டைப்பெட்டிக்குள் வைத்துக் கொடுத்த விவகாரம்: பணியாளர் சஸ்பெண்ட்..!