சென்னை:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சட்டப்பிரிவு 142 பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். மேலும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் கால தாமதப்படுத்தியது தவறு என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்த நிலையில், மீதமுள்ள 6 பேரின் விடுதலை குறித்து கள ஆய்வாக, பாதிக்கப்பட்டோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் ஈடிவி பாரத் கருத்துக்களை இந்த பதிவில் காண்போம். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இவருடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேர் மரணமடைந்து 50க்கும் மேற்பட்டோர் கை கால்களை இழந்து தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மறைந்த காவல் ஆய்வாளர் எட்வர்ட் ஜோசப்-ன் சகோதரர் ஜோசப் கூறுகையில், “இது திட்டமிட்ட ஒரு சதி மற்றும் படுகொலையாகும். ஒரு நாட்டின் பிரதமர் மற்றும் 16 பேர் உயிரிழந்து, கை, கால்களை இழந்து 50 பேர் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். விடுதலை செய்யும் முன்னர் பாதிக்கப்பட்டவர்களையும் அழைத்து பேசி இருக்க வேண்டும். யார் வந்து கேட்டாலும் பேட்டரி கொடுப்பார்களா? இது திட்டமிட்ட படுகொலை. எதிர்காலத்தில் இது போன்று நடக்க கூடாது. அனைத்து வழக்குகளில் இருந்தும் தப்பிக்கலாம் ஆனால் கடவுளின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. இது குறித்து பல்வேறு முறை ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய, மாநில அரசு என்னை போன்று பாதிக்கப்பட்டவரை அழைத்து என்ன நடந்தது என்று கேட்க வேண்டும். ஒரு பிரதமருக்கு இவ்வாறு நடப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்; ஆனால் தினசரி நாளிதழ்களில் கொலை, குற்றம் அதிகரித்து வருகிறது. என்னுடைய அண்ணன் எம்ஜிஆரின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர். அண்ணனின் மறைவு, அண்ணி மற்றும் அவர்களது குழந்தைகள் மற்றும் எனக்கு மிகுந்த வருத்தத்தையும் பொருளாதார ரீதியில் மிகுந்த பின்னடைவையும் ஏற்படுத்தியது. எங்களுடைய இரண்டு சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு உள்ளாகி, வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தோம்” என்றார்.
மறைந்த சந்தானி பேகம் தென்சென்னை மகிளா காங்கிரஸ் தலைவர் மகன் அப்பாஸ் கூறியதாவது, “தென் சென்னை மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்தவர் எனது அம்மா. அம்மா இறக்கும் போது எனக்கு பத்து வயது இருக்கும். அம்மா இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்பா உயிரிழந்தார். ஒரு பத்து வயது குழந்தை இந்த சமூகத்தில் தாய், தந்தை இழந்து வாழ்வது, எவ்வளவு சிரமமானது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். பேரறிவாளனை விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இது மிகப் பெரிய அநியாயம். அமைச்சரவை போட்ட தீர்மானத்தை கவர்னர் நிறைவேற்ற தாமதம் ஆனதால் அவரை வெளியே விடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. பேரறிவாளன் விடுதலை செய்ததை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது, தமிழ்நாட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர் ஒன்றும் நாட்டின் விடுதலைக்காக போராடவில்லை, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி அவர். சில காரணத்திற்காக மன்னித்து அவரை விடுதலை செய்துள்ளனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்து கிட்டத்தட்ட பத்து வருடங்களாக, உச்ச நீதிமன்றம், ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். முதலமைச்சர் அவரை கட்டியணைத்து சால்வை போடும்போது, ரொம்ப வேதனையடைந்தேன். பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு முதலமைச்சர் அவர் தானே, எங்களுடைய குடும்பத்தின் கண்ணீரை முதலமைச்சர் தான் துடைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
முதலமைச்சர் - பேரறிவாளன் சந்திப்பு இது குறித்து சுரேஷ் (மக்கள் சிவில் உரிமைக் கழக் பொதுச்செயலாளர்) என்பவர் கூறுகையில், “நாகரீக சமுதாயத்தின் உடைய ஒரு முக்கியமான மரபு என்ன என்றால் மன்னிக்கவும், மறக்கவும், மறுவாழ்வுக்கு என்ன பண்ணுவது என்பதை பற்றியுள்ளது. 31 வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள். இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும்போது பெரும்பாலான மக்கள் தூக்குதண்டனை வேண்டுமென்று தெரிவிப்பார்கள். ஒரு சமுதாயத்தில் சில கட்டுப்பாடுகளை, பெருவாரியான மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் செயல்படுத்த முடியாது. நாகரீக தன்மையைப் பொறுத்து தான் முடிவு செய்ய வேண்டும்.
பேரறிவாளனை வெளியில் விட்டது தவறோ, சரியோ, கொலை செய்தாறோ, செய்யவில்லையோ என்பது முக்கியமல்ல, 31 வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக 31 வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் இத்தனை வருடங்களில் சிறையில் அவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுவரை இடம்பெறவில்லை, பரோலில் வெளி வந்த போதும் சரியான நேரத்தில் திரும்பவும் சிறைக்கு சென்றுள்ளார். மேலும் நன்றாக படித்துள்ளார். பிறருக்காக உதவி செய்துள்ளார். பொதுவான சமுதாயத்தில் குற்றவாளி என சொல்லப்பட்ட நபருக்கு மறுவாழ்வுக்கு வழி வகுக்க வேண்டும் என்று பொதுவான கருத்து உள்ளது.
இந்த கருத்தின்படி பேரறிவாளனை வெளியில் விட்டது, தவறு என்று கூற முடியாது. ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் இந்த ஏழு பேருக்கு மன்னிப்பை வழங்கியுள்ளனர். தங்களுடைய சொந்தங்களை இழந்த பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பேரறிவாளன் வெளியேவந்தது வலியைக் கொடுக்கும். இதற்கு மாற்று கருத்து இல்லை, ஆனால் இரண்டையும் சரிசமமாக பார்க்க வேண்டும். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. நாட்டில் மறுவாழ்வு கொள்கை ஏன் இருக்கிறது, குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை உணர்ந்து மறு வாழ்க்கை வாழ உதவி செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் மனநலம் புரிகிறது, அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும், உதவ வேண்டும்.
ஏதோ ஒரு காரணத்துக்காக கொலை நடந்து இருக்கலாம். கொலை நடந்ததால்தான் மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. அவர் என்ன குற்றம் செய்திருக்கிறார் என்று கணக்கில் எடுக்க கூடாது, குற்றவாளியின் நன்னடத்தை பற்றி தான் கணக்கெடுக்க வேண்டும். சிறையில் எப்படி இருந்தார் என்பதைதான் பார்க்க வேண்டும். அவர் இந்தக் குற்றத்தை செய்தார், அந்த குற்றத்தை செய்தார் என்று பார்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் பார்க்கும்போது பேரறிவாளனை விடுதலை செய்ததில் எவ்வித தவறும் இல்லை. இதே போன்று மீதமுள்ள ஆறு பேரையும் அவர்களுடைய நன்னடத்தை அடிப்படையில் வெளியில் விடுவது சட்டத்திற்கு புறம்பானது ஒன்றும் இல்லை” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுகிறோம் என்று பெருந்தன்மையோடு நடந்து கொண்டனர். காங்கிரஸ் போராடுவதற்கு உரிமை உண்டு, ஆனால் சட்டத்தில் அவர்களை கைது சிறையில் அடைக்க இடமில்லை. மேலும், இதனால் வரைக்கும் சிறையில் இருக்கும் அந்த ஆறு பேர் மீதும் எவ்வித குற்றமும் இல்லை. குற்றவாளியின் நன்னடத்தை அடிப்படையில் அவர்களை வெளியில் விடுவது எந்தவித தவறும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க:குற்றவாளி குற்றவாளி தான்.. குற்றவாளி கடவுளாக முடியாது - கே.எஸ்.அழகிரி