சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையெழுத்திட வேண்டும் எனவும், இரு ஆசிரியைகளும் சேலம் செவ்வாய் பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
நான்கு வாரங்களுக்கு பின், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஐந்து பேரும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. முதல் நான்கு வாரங்கள் நிபந்தனையை பூர்த்தி செய்த நிலையில், தற்போது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்திடும்படி நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு.. நவம்பர் 7ஆம் தேதி விசாரணை