இ-பாஸ், ஊரடங்கு ஆகியவற்றிற்கு தளர்வு அளிக்கக்கோரி இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் மாநிலத் தலைவர் சி.என். ராஜா, மாநிலச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய 85 விழுக்காடு பேர் எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள். அவர்களால் மேலும் நோய்ப் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, கரோனா பரிசோதனையைத் தொடர்ந்து செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இன்னும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மையங்கள் இல்லாமல் இருக்கிறது. அப்படியே கரோனா பரிசோதனை எடுத்த பின்பும் சோதனை முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும், செவிலியரும் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். இந்திய மருத்துவ சங்கம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனையில் பாசிட்டிவால் 32 மருத்துவர்களும், சோதனையில் நெகட்டிவ் வந்தும் 15 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை அரசுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறோம்.