சென்னை:சென்னையை அடுத்த ஆவடி அருகே அண்ணனூர் தேவி நகரைச் சேர்ந்தவர், வள்ளிநாயகம்(32). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஆண்டு முதல் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 5ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காவல்துறை வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. வாகனத்தில் இருந்த வள்ளிநாயகம், உதவி ஆய்வாளர் முருகேசன் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதனிடையே கடந்த 8ஆம் தேதி வள்ளிநாயகம் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வாகனத்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும், விபத்திற்குள்ளான வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்பதால், அந்த வாகனத்தை பழுது பார்க்க 7 லட்சம் ரூபாய் பணத்தை வள்ளிநாயகம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காவலர் வள்ளிநாயகம் நேற்று(மே.11) வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.