அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நாள் முதலே ஒரே போராட்டமும், ஆர்பாட்டமுமாக இருக்கிறது. 3 அமைச்சர்கள், 44 சிட்டிங் எம்எல்ஏக்கள் என 47 நபர்களுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கொந்தளிப்பில் இருக்கும் அவர்களது ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமை இத்தனை பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து அலசுகிறது இத்தொகுப்பு...
அதிமுக தலைமை புறக்கணித்த அமைச்சர்கள்:
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் அமைச்சர்கள் பாஸ்கரன், நிலோபர் கபில், எஸ். வளர்மதி ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. அதற்கான பின்புலம் குறித்து தெரிந்துகொள்வோம்...
நிலோபர் கபில் - கே.சி. வீரமணி மோதல்!
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நிலோபர் கபில். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக உள்ள இவருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. நிலோபரின் ஆதரவாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிலோபர் கபிலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு அமைச்சர் கே.சி. வீரமணி உடனான மோதல் போக்குதான் காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து நிலோபர் மனம் திறந்தார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அமைச்சர் கே.சி. வீரமணிதான் எனக்கு சீட் தரக்கூடாது என வலியுறுத்தியிருப்பார். மக்களவை தேர்தலில் நான் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறுகின்றனர். பாஜக உடன் கூட்டணி வைத்தால் இஸ்லாமிய சமுதாயத்தினர் வாக்களிக்கத் தயங்கத்தான் செய்வார்கள். அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்" என தெரிவித்தார்.
வாணியம்பாடி தொகுதியில் நிலோபர் கபிலுக்கு பதிலாக ஆலங்காயம் அதிமுக ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் என்பவர் போட்டியிடுகிறார். அதிமுக தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுத்தாலும், கட்சியின் வெற்றிக்காக இந்த தேர்தலிலும் உழைப்பேன் என்கிறார் நிலோபர் கபில்.
ரத்தத்தின் ரத்தங்கள் இடையே முரண் - வளர்மதிக்கு வாய்ப்பு மறுப்பு
2014ஆம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிப் பதவியை இழந்தபோது, அவரது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் போட்டியிட்டு ஜெயலலிதா பெற்றதைவிட 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி கண்டவர்தான் வளர்மதி. பின்னர் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக வளர்மதி தரப்பு ஏழு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சர்ச்சை எழுந்தது. அதுமட்டுமில்லாது திருச்சி மாநகர அதிமுக நிர்வாகிகளுடனும் வளர்மதி மோதல் போக்கை கடைப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த காரணங்களால்தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
வளர்மதிக்குப் பதிலாக ஸ்ரீரங்கம் தொகுதியில், ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் (1991-1996) விவசாயத் துறை அமைச்சராக இருந்த கு.ப. கிருஷ்ணனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பரிதாப நிலையில் பாஸ்கரன்: