உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் நாளை சென்னைக்கு (அக்.11) வருகை தருகின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு இந்தியாவிற்கு மேலும் பெருமை தேடித்தர உள்ளது. இதனையொட்டி சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் ஐந்தாம் நம்பர் கேட் பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்திய தேசியக் கொடி மற்றும் சீன தேசிய கொடி ஏற்றப்பட்டது. குறிப்பாக இரு நாட்டு தலைவர்களை வரவேற்க தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி வாழை இலை, வாழை மரம், கரும்பு, வெத்தலைக் கொடி ஆகியவற்றில் தோரணங்கள் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.