சென்னை: சிறப்பு வாய்ந்த 75 கலங்கரை விளக்கங்களை தேர்வு செய்து ரூபாய் 60கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகச் செயலாளர் டி.கே. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் செப்டம்பர் 25 -ஆம் தேதி கலங்கரை விளக்கம் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(செப்.25) கலங்கரை விளக்கம் தினத்தை முன்னிட்டு, கலங்கரை விளக்கம் திருவிழாவாக செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
அதன்படி, திருவிழாவின் தொடக்க விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மூலம் கோவாவில் கடந்த சனிக்கிழமை (செப்.23) தொடங்கி வைக்கப்பட்டது. இதன் நிறைவு விழா சென்னையில் இன்று(செப்.25) நடைபெற்றது.
இதில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகச் செயலாளர் டி.கே. ராமச்சந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவில் மொத்தம் 203 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு கலங்கரை விளக்கத்தின் பின்னாலும் வரலாறு, கலாச்சாரம், கட்டடக்கலை உள்ளிட்ட சிறப்பு தகவல்கள் நிறைந்திருக்கும்.
இதையும் படிங்க:இலவசமாக மெட்ரோவில் பயணம் செய்வது எப்படி?.. வைரல் வீடியோவால் வழக்கில் சிக்கிய யூடியூபர்!
இந்தியாவில் 1612-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மிகப் பழைமையான கலங்கரை விளக்கம் கோவாவில் உள்ளது. இதேப்போல், தமிழகத்தில் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மிகப் பழமையானது ஆகும். சென்னையில் தற்போதைய கலங்கரை விளக்கம் 1974-ம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இதற்கு முன்பு புனித ஜார்ஜ் கோட்டையிலும், உயர்நீதிமன்ற வளாகத்திலும் இரண்டு இடங்கள் என 3 கலங்கரை விளக்கங்கள் முன்னதாகவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ்நாட்டில் 26 கலங்கரை விளக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 75-வது ஆண்டு சுதந்திர தின பெருவிழா நாடு முழுவதிலும், கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நாட்டிலுள்ள 203 கலங்கரை விளக்கங்களில் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட 75 கலங்கரை விளக்கங்களை தேர்வு செய்யது, 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. மேலும் 75 கலங்கரை விளக்கங்களிலும் 'கலங்கரை விளக்க திருவிழா' என்ற பெயரில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார்!