சென்னை:குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கை தொடர்பாக 2021ம் ஆண்டு செப்டம்பரில் அரசுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை எனவும், அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், மனநலம் பாதித்து சாலையில் திரிபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா? தொலைபேசி எண்ணை கூட அரசு அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.