சென்னை:தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் மற்றும் தனியார் முகமைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆப்ரேட்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலுள்ள பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக கணினி இயக்குதல், புகைப்படம் எடுத்தல், ஓட்டுநர் உரிமம் அட்டை தயாரித்தல் உள்ளிட்ட அலுவலக உதவிப் பணிகளை செய்துவருகின்றனர்.
நீண்டகாலமாக பணியாற்றியவர்களின் பணியை முறைபடுத்தும்படி 2014, 2017ஆம் ஆண்டுகளில் ஒப்பந்த பணியாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் நீதிமன்றம், ஒப்பந்த பணியாளர்களை முறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று இ.எஸ். வானுமாமலை, வி. ராஜலட்சுமி உள்ளிட்ட 45 பேர் கூட்டாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்ப்பில், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கோர உரிமையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி பார்த்திபன், கடந்த 2017, 2021ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றம் விரிவாக ஆராய்ந்து அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில், தற்போதைய மனுதாரர்கள் 45 பேரின் பணியையும் முறைபடுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பான நடவடிக்கைகளை 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:பெரியகுளம் நில மோசடி வழக்கு - மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு