சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பங்குப்போட்டு விற்பனை செய்த பதிவுத் துறை அலுவலர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரித்து ஊழல் முறைகேடு செய்த சார்பதிவாளர் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளது. மேலும் முக்கியமான ஆதாரங்களையும், புகாரில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்புகாரில், "1990 முதல் 2014 வரை 165 சட்டவிரோத பள்ளிக்கரணை சதுப்பு நில பதிவுகள் நடந்துள்ளன.
மொத்தம் கிட்டத்தட்ட 1000 ஏக்கர் அளவிற்கு (ஒரே நிலம் மீண்டும் பதிவானதைச் சேர்த்து) பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் சட்டவிரோத பதிவுகள் சார்பதிவாளர்களால் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் புகாரில் கடந்த 20 ஆண்டுகளில் எந்தெந்தப் பதிவுத் துறை அலுவலர்கள் எப்படி ஊழல் செய்து பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை அபகரிக்க முயன்றார்கள் என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளோம். புகாரில் குறிப்பிடப்பட்ட அலுவலர்கள் தற்போது பதிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்துவருகின்றனர். இந்த அபகரிப்பில் பதிவுத் துறை அலுவலர்களே ஒரு மாபியா போல செயல்பட்டுள்ளது தெரிகிறது.
பள்ளிக்கரணை கிராமம் சைதாப்பேட்டை இணைப்பு 1 சார்பதிவாளர் அலுவலகத்தின்கீழ் வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலமான சர்வே எண் 657 / 1A நிலத்தில், 66.7 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் பொருட்டு, இதை சம்பந்தமே இல்லாத ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அப்போதைய சார்பதிவாளரான அங்கையற்கண்ணி பதிவுசெய்கிறார்.
இந்த நிலம் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பன் பரம்பரைக்கு, ஆங்கிலேயர் கொடுத்த நிலம் என்று அதை விற்கும் குழு கூறிக்கொண்டும் அதைப் புதிதாக லக்ஷ்மணன் என்பவர் 2004ஆம் ஆண்டு உருவாக்கிய பூமி பாலக அறக்கட்டளை பெயரில் பதிவிடுகின்றனர். அது சதுப்பு நிலம் என்று தெரிந்து அருகிலுள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பை கேட்டுப் பெற்று அதைவிட மிகக்குறைவாக ஒரு ஏக்கர் ஒரு லட்சம் என்னும் விகிதம் 66 ஏக்கரை 66 லட்சத்திற்கு செய்கிறார் ராயபுரம் சார்பதிவாளர் அங்கயற்கண்ணி.
CCB 2012இல் மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால் அங்கயற்கண்ணி மீது வழக்கு போடப்படவில்லை, பதவி நீக்கமும் செய்யவில்லை. மாறாக அவர்களுக்குப் பதிவுத் துறையில் பல பதவி உயர்வு கொடுக்கப்பட்டு இன்று தமிழ்நாட்டின் பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளைக் கண்டுபிடிக்கும் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.