சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, பல்மருத்துக்கல்லூரி, இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைத் தேர்வு செய்வதற்கு 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் ஆகஸ்ட் 1, 2 ஆகியத் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்துகொண்டு, 4-ம் தேதி முதல் 8-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 – 2024-ம் ஆண்டின் இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகியப் படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரையில் பெறப்பட்டன.
அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கு 3,042 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 16-ம் தேதி வெளியிடப்பட்டது.
2023-24ஆம் ஆண்டிற்கான அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் 6,326 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பில் 1,768 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.