சென்னை:குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று (நவம்பர் 27) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.