சென்னை:நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், 2016ஆம் ஆண்டு வெளியான தனது "மெட்ரோ" படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே. கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ. ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்துகொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
பிற மொழிகளில் “மெட்ரோ” படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், அதே அம்சங்களுடன் வலிமை கதை படமாக்கப்பட்டது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். எனவே வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வலிமை திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதால், அதற்கு தடை கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் ஹெச். வினோத் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் தாக்கல் செய்தார்.
அந்த பதில் மனுவில், செய்தித்தாள்களில் அன்றாட வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் உருவான “வலிமை” படத்தின் கதை, கரு, கதாப்பாத்திரங்கள், உச்ச காட்சி அனைத்தும் வெவ்வேறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு என்றும், எனவே எந்த காப்புரிமையையும் மீறவில்லை என்றும் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.