சென்னை:பாலியல் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறை மனுவை போதிய முகாந்திரம் இல்லை எனத் தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த மணிகண்டனை ஜூன் 20ஆம் தேதி தனிப்படை காவலர்கள் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து, ஜூலை 2ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜூன் 26ஆம் தேதி அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 5 நாள் காவல் கேட்டு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுதாக்கல் செய்தனர்.