சென்னை: கோயில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையாக ஆடை அணிவதில்லை என்பதால், கோயிலின் புனிதத்தைக் காக்கும் வகையில், ஆடைக்கட்டுப்பாடு விதித்து, கோயில்கள் முன் விளம்பரப் பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் பிற மதத்தவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 3) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ள கோயில்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு
மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில், சில புகைப்படங்களைத் தாக்கல் செய்து, இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் முறையற்ற வகையில் ஆடைகளை அணிந்து செல்வதாக குற்றஞ்சாட்டினார். ஒவ்வொரு கோயில்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டால் போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.