நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான "ஆக்ஷன்" என்ற படத்தை ரவீந்திரன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதியளித்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால், விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக எடுக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.
இந்நிலையில், தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அதில், “ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.29 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிட வேண்டும். தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து, வேறு நபருக்கு படமெடுத்த ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.