சென்னை :பிப்ரவரி 19இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயக்குமாரின் பிணை மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜெயக்குமார் பிணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உடலில் காயங்கள் இல்லை. கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு. மருத்துவ அறிக்கையிலும் காயங்கள் இல்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னர், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தனர். ஆனால், நாளைய (மார்ச் 2) வழக்குகளுக்கான பட்டியல் ஏற்கனவே தயாராகி விட்டதால் ஜெயக்குமாரின் மனுவை வரும் வியாழக்கிழமை (மார்ச் 03) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து திரும்பும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடம்: அமைச்சர் பொன்முடி