சென்னைமாநகரில் குப்பைகளை சேகரித்து குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதால் பள்ளி மாணவ, மாணவியரும் மற்றும் வேலைக்குச் செல்வோரும் பாதிக்கப்படுவதால் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க சென்னை மாநகராட்சிக்குத் தடை விதிக்கக்கோரி கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி குப்பைகளை எடுப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. குப்பைகள் மீது வலையைப் போர்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டுவதாகவும், அதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதுடன் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.