சென்னை:மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்டுவந்த 200 சிற்றுந்துகளில் தற்போது 75 முதல் 100 மட்டுமே இயக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நகரின் உள்பகுதிகளிலிருந்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்குப் பயணம் செய்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகிறார்கள்.
போக்குவரத்து அலுவலர்களின் கூற்றுப்படி, சிற்றுந்துகள் சென்னை நகரத்தின் முக்கியப் பகுதிகள், புறநகரின் உள்பகுதிகளில் பயணிகளை ரயில் நிலையங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் கொண்டுசெல்ல உதவியது. ஆனால் தற்போது சிற்றுந்துகள் பிரதான சாலையிலும் சரி, உள்பகுதியில் உள்ள சாலைகளிலும் சரி அரிதாகவே காணப்படுகின்றன.
இது குறித்து மாநகரப் பேருந்து நடத்துநர் ஒருவர் கூறுகையில், "கரோனா தொற்று முதல் அலை வருவதற்கு முன்பே சிற்றுந்துகளின் எண்ணிக்கையை மாநகரப் போக்குவரத்துக் கழகம் போதுமான வருமானம் இல்லை எனக்கூறி குறைத்துவிட்டது.
கரோனா தொற்று முழுவதுமாகக் கட்டுப்படுத்திய பின்பு மேலும் 100 சிற்றுந்துகளை இயக்கலாம் என அலுவலர்கள் கூறினார்கள். எனினும் தொற்றின் நிலைமை கட்டுக்குள் வந்த பிறகுகூட சிற்றுந்துகள் ஒரு சில பணிமனைகளில் இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன" என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலர் சிட்டிசன் செந்தில் கூறுகையில், "நகரின் உள்பகுதிகளில் வரும் பயணிகளுக்கு சிற்றுந்துகள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. 200 பேருந்துகள் போதுமானதாக இருக்காது என்று கூறி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூடுதலாக 100 சிற்றுந்துகள் இயக்கப்படும் என 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. தற்போது வெறும் 100 பேருந்துகள் மட்டுமே எல்லா பகுதிகளிலும் இயக்கப்படுவதுபோல் தெரிகிறது.