சென்னை:தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்தப்பட்ட சோதனைகளை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
செம்மண் முறைகேடு மூலமாக கிடைத்த பெருந்தொகையை, ஹவாலா பரிவர்த்தனைகளாக்கி அதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்ச ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்து இருந்தது.