சென்னை: தமிழ்நாட்டின் 33 ஆவது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழ்நாட்டில் மக்கள் பெரிய அளவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் 12,585 கிராம பஞ்சாயத்துகளில் 4,008 கிராம பஞ்சாயத்துகளில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். நகராட்சிகளில் 121 இல் 36 நகராட்சிகள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளன.
96 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 88.6% பேர் இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர். இன்னும், 92.45 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. முதல் தவணை, இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் என எல்லாம் சேர்த்து 4.78 கோடி டோஸ் தமிழ்நாட்டில் இன்னும் செலுத்த வேண்டியுள்ளது.
மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள் ஆகியவற்றை கையாள்வது குறித்து விவாதிக்க வருகிற 11ஆம் தேதி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி செயல் இயக்குநர்கள், உள்ளாட்சித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆகியோருடன் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை செய்துக் கொண்டு இருக்கிறது. மழைக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அமைச்சர்கள், செயலாளர்கள், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நிர்வாகிகளுடன் 11ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகள், டெங்கு, மலேரியா போன்றவற்றில் இருந்து பாதுாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள காவிரி, பவானி ஆற்றின் கரையோரங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம்கள் நடைபெறும். வட கிழக்கு பருவமழைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சினைமுட்டை விவகாரத்தில் தவறு செய்த மருத்துவமனையின் ஸ்கேன் சென்டர் மூடுவதற்கும், 4 மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளை டிஜ்சார்ஜ் செய்து விட்டு, மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு மருத்துமனை நிர்வாகங்கள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. அதனை எதிர்த்து மக்கள் நல்வாழ்வுத்துறை மேல் முறையீடு செய்தது. அதில், மருத்துவத்துறையின் நடவடிக்கைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனையில் சேர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் அதனை எதிர்த்து அநியாயம், அக்கிரமம் செய்து, மனித இனத்திற்கே பாதிப்பு என்ற செயலில் ஈடுப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது வருத்தத்துக்கு உரியதாகும். கருமுட்டை விவகாரம் எந்தளவிற்கு பாதிப்பு என்பதை மக்கள் அறிவார்கள். 4 மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் மருத்துவர்களுக்கு நியாயமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களை பாதுகாப்பாகவும், சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சினை முட்டை விவாகரத்தில் ஒரு மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், டெங்கு பாதிப்பு 2021 ஆம் ஆண்டு 6,039 பேருக்கும், 2022ஆம் ஆண்டு ஜூன் வரை 3,172 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதனடிப்படையில், 18,643 பேர் தமிழ்நாடு முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, 1,13,653 மாதிரிகள் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15,805 கொசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நீட் குறித்த மத்திய அரசின் கேள்விக்கு பதில் அனுப்பியுள்ளோம்’ - அமைச்சர் மா.சுப்ரமணியன்