கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, மார்ச் 25ஆம் தேதி முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமான வகுப்புகள், தேர்வுகள் போன்ற கல்வி சார்ந்த நடவடிக்கைகள் நடைபெறவில்லை. இதையடுத்து தேர்வு, கல்வியாண்டு தொடங்குவது குறித்து பரிந்துரைகள் வழங்க, பேராசிரியர் குஹத் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு நியமித்தது. இந்த குழு, ஜூலை மாதம் தேர்வுகளை நடத்தலாம் என ஏப்ரலில் சிபாரிசு செய்தது.
ஆனால், தொற்று தீவிரம் காரணமாக தேர்வு நடத்துவது குறித்து மறு ஆய்வு செய்து பரிந்துரை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையில் அந்த குழு சமர்ப்பித்த திருத்தியமைக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க, பல்கலைக்கழக மானியக் குழு ஜூலை 6ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்கக் கோரியும், அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், கோயம்புத்தூரை சேர்ந்த முதுகலை மாணவர் அம்ஜத் அலிகான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் கலந்தாலோசிக்காமல் இந்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக கல்லூரிகள் செயல்படாத நிலையில், வகுப்புகள் நடத்தப்படாத நிலையில், தேர்வு நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கல்லூரிகள், கரோனா பரிசோதனை மையங்களாகவும், தனிமைப்படுத்தும் மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர், அங்கு தேர்வு நடத்துவது, மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.