சென்னை:இந்த இயந்திரமயமான காலகட்டத்தில் மனிதர்கள் இயந்திரங்களைவிட அதிவேகமாக செயல்பட முயல்கின்றனர். விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் வீட்டுக்கு இரு வாகனங்கள் பயன்படுத்தும் நிலைக்கு மனிதர்களைத் தள்ளியுள்ளது இந்த சமூகம். இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்படுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த மெட்ரோ ரயில் திட்டம் அமைந்தது. மெட்ரோ ரயில், தூரமான இடங்களை குறைந்த நேரத்தில் கடக்கவும், அதே நேரத்தில் சாலை போக்குவரத்தை தவிர்க்கவும் பெரிதும் உதவுகிறது. மெட்ரோ போக்குவரத்து முறை, மக்களுக்கு அதிக உபயோகமாக இருந்து வரும் நிலையில் நெல்லை மக்களுக்கு அது கைகொடுக்காமல் போனது ஏன்?
சென்னையை தொடர்ந்து கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்ட அறிக்கை, சென்ற மாதம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
இதில், திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயிலில், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இருக்கிறது.
அதைத் தொடர்ந்து சென்னையில் தற்போது, 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரத்தில் இருந்து சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் தற்போது 45க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டபாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், 40 கி.மீ. மேல் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில், திருச்சி, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் அமைக்க முடியுமா என்று பிப்ரவரி மாதத்தில் இருந்து, பல்வேறு ஆய்வுகள் நடத்தபட்டன. 2023-24 தமிழக பட்ஜெட்டில், ரூ.17,500 கோடி மதிப்பீட்டில் கோவை (9,000 கோடி) மற்றும் மதுரை(8,500 கோடி) ஆகிய இடங்களில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து, கோவை மெட்ரோ ரயில் திட்டம் 139 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 45 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரையிலும் அமைக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு ரூ.9,424 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதைப்போல், மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாக, மதுரை ஒத்தக்கடையில் ஆய்வுப் பணி தொடங்கியது. இந்நிலையில், ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சுரங்கப்பாதை வழியாக செயல்படுத்தினால் ரூ.8 ஆயிரம் கோடியும், உயர்மட்ட பாலம் வழியாக செயல்படுத்தினால் ரூ.6 ஆயிரம் கோடியும் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சேலத்தில் இளைஞரணி மாநாடு நடைபெறும் என திமுக அறிவிப்பு - எப்போது தெரியுமா?
இது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர். மேலும் தமிழகத்தில், சேலம், திருச்சி, திருநெல்வேலி, ஆகிய இடங்களில், மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை குறித்து, ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. சேலத்தில் 40 கி.மீ, திருச்சியில் 38 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வு நடந்து வந்தது. இந்நிலையில், திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் அமைக்க சாத்திய கூறுகள் இல்லை என தெரியவந்துள்ள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டப்போது, " ஒரு நகரில் புதியதாக மெட்ரா ரயில் அமைக்க சாத்தியக் கூறுகள் பல்வேறு வகையில் ஆராயப்படும். மண் பரிசோதனை, சாலையின் அகலம், எந்த பகுதிகளுக்கு இடைய மெட்ரா ரயில் இணைக்கபோவது, அவை உயர்மட்ட பாதையா, இல்லை, சுரங்கவழிப்பாதையா, என்று பல்வேறு சோதனைகள், மற்றும் மெட்ரோ ரயில் இப்போது அந்த நகருக்கு தேவையா என்று பல்வேறு கோணத்தில், ஆராயப்படும். இந்நிலையில் தற்போது, கோவை மற்றும் மதுரையில் அமைக்கபடவுள்ளது. இதைத் தொடர்ந்து, திருச்சி, சேலம், திருநெல்வேலி பகுதிகளில் சாத்திய கூறுகளை ஆய்வு செய்து இருந்தோம்.
இந்நிலையில், "திருநெல்வேலியில், ராதாபுரம் தாலுக்காவில் உள்ள பேட்டை மற்றும் சமூகரெங்காபுரம் மற்றும் பாளையங்கோட்டை போன்ற பல வழித்தடங்களில் சாத்தியக்கூறுகள் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், திருநெல்வேலியில், மெட்ரோ ரயிலின் தேவை, குறைவாக இருக்கிறது.
ஏனென்றால், ஒரு நகரில், குறிபிட்ட அளவிற்கு போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து தேவை இருப்பதை பி.எச்.பி.டி (PHPD(PEAK HOURS AND PEAK DIRECTION)) என்று கூறுவோம். அதாவது, மக்கள் அதிக அளவில் எந்த நேரத்தில் பயணிக்கிறார்கள். எந்த இடத்தில் இருந்து, எந்த இடத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை குறித்து ஆய்வு செய்வது. எந்த சாலையை மக்கள் அதிக அளவில் பயணப்படுகிறார்கள் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
ஆனால், திருநெல்வேலியில், செய்யப்பட்ட முதற்கட்ட ஆய்வில் பீக் ஹவர் பீக் டைரக்ஷன் (PHPD) போக்குவரத்து என்பது தேவையான அளவை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பி.எச்.பி.டி. தரநிலை என்பது, 2-மணி நேரத்திற்கு 24,000 பயணிகள், அதாவது,15 நிமிடத்திற்கு 3000 பயணிகள் பயணிக்க வேண்டும். ஆனால் திருநெல்வேலியில், நடத்தப்பட்ட ஆய்வில், நாங்கள் நினைத்த அளவு வரவில்லை. இதனால் திருநெல்வேலியில், மெட்ரோ ரயில் அமைப்பதற்கான வாய்பு குறைவு", என தெரிவித்தனர்.
மேலும், சேலம் திருச்சி மெட்ரோ ரயில்களுக்கான வாய்ப்புகள் குறித்து கேட்ட போது, "சேலம், திருச்சியில், மெட்ரோ ரயிலுக்கான ஆய்வுகள் நடத்தப்பட்டன அதில், எங்களுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளது. மேலும் பி.எச்.பி.டி. தரநிலை படி, அங்கு மெட்ரோ ரயில்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில், மேம்பாலங்கள் நிறைய உள்ளன, அதேப்போல், ஆற்றுப்பாலங்களும் உள்ளன.
சேலத்தை பொறுத்தவரை சேலம் நகரம், சென்னை, கரூர் சாலை, பெங்களூரு சாலை என நான்கு வழிகளும், சேலத்தை இணைக்கின்றன. இதில், 38.கீ.மீ தூரத்திற்கு அமைக்க சாத்திய கூறுகள் உள்ளன. அதேபோல் திருச்சியில் 45.கி.மீ, 2 கட்டங்களாக இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. ஒன்று சமயபுரம் முதல் வயலூர் வரை, மற்றோன்று, திருவாகுடி முதல், பஞ்சப்பூர் வரை ஆகிய வழித்தடங்களில் சாத்திய கூறுகள் இருகின்றன" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிறப்புக் காட்சிக்கு ரோகிணி தியேட்டருக்கு அபராதம் விதித்த வழக்கு: தமிழக டி.ஜி.பி. பதிலளிக்க உத்தரவு!