சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் கிறிஸ்டோபர் என்ற நபர் கிருஸ்த்துவ மதம் தொடர்பான வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதைக் கண்ட புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆடியோ ஒன்றை பதிவு செய்து அதே வாட்ஸ் அப் குருப்பில் பகிர்ந்துள்ளார்.
அவர் பேசிய அந்த ஆடியோ பதிவில், "கிறிஸ்த்துவ மந்திரத்தைக் கூறி, சிறு தண்ணீரை மாற்றுத்திறனாளியின் மீது தெளித்ததும் எழுந்து நடந்துவிடுவார்கள் என உள்ளது. அது போன்று நடக்குமா?. எனவே இது போன்று மதம் தொடர்பான பாடலை எல்லாம் அனுப்பக்கூடாது. இது இந்திய நாடு, ராமர் பூமியில் மசூதியை இடித்து கோயில் கட்டி வாழ்கிறோம்.
நாங்கள் தான் பூஜை செய்வோம், பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்போம், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களான நீங்கள் அதைத்தடுத்து நிறுத்தி பாருங்கள். அது முடியவில்லை என்றால் பாகிஸ்தான், சவுதி போன்ற நாடுகளில் சென்று படியுங்கள்.தற்போது இந்தியாவில் 80% இந்துக்கள் உள்ளோம், 20% மட்டுமே முஸ்லீம், கிறிஸ்துவர்கள் உள்ளனர். இங்கு யார் மெஜாரிட்டியோ அவர்கள் தான் இந்தியாவை ஆளுவார்கள், ஆகையால் இது போன்ற பாடல்களை எல்லாம் பரப்பாதீர்கள்" என பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது அந்த ஆடியோ தொடர்பாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, "கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நண்பர்கள் உள்ள வாட்ஸ் குரூப்பில் மதம் தொடர்பான ஆடியோ பகிர்ந்ததாகவும், தனது நண்பர் ஒருவர் போலீஸ் துறையில் இருந்து மத போதகராக மாறி இருந்து வருவதாகவும், அவர் அடிக்கடி இந்துக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் குரூப்பில் வீடியோ பரப்புவார் எனவும் குறிப்பிட்டார்.
அதே போல சமீபத்தில் ரதயாத்திரை குறித்து அவதூறாக பரப்பும் விதமாக அனுப்பிய வீடியோவுக்கு தான் பதிலளிக்கும் விதமாக இந்த ஆடியோவை பதிவிட்டதாகவும், அப்போது தனக்கும் தனது நண்பர் கிறிஸ்டோபருக்கும் நிறைய உரையாடல் நடந்ததாகவும், அதனை மனதில் வைத்துக் கொண்டு சில உரையாடலை சித்தரித்து இந்த ஆடியோவை மட்டும் சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டதாகவும்" தெரிவித்தார்.