சென்னை: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்காதது, மீண்டும் அதிமுக வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே அதிமுக - பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் நிலவி வருகிறது.
தொடக்கத்தில் தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது அதில் இருந்து சற்று இறங்கி உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், அதிமுக - பாஜக கூட்டணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடுத்திய நிலையில், இன்னும் இறுதி செய்யவில்லை என அண்ணாமலை கூறி இருந்தார்.
அண்ணாமலையின் இது போன்ற பேச்சுகளுக்கு திருப்பம் கொடுக்கும் வகையில், அதிமுகவின் தம்பிதுரையை அனுப்பி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கக் கூறினார், ஈபிஎஸ். ஆனால் நடைபெற இருக்கக் கூடிய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு 3 இடங்கள் ஒதுக்கக் கோரிச் சென்ற தம்பிதுரை, இறுதியாக அண்ணாமலையின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டி உள்ளார்.
அதற்குக் கூட்டணியை உறுதி செய்வது டெல்லி தலைமைதான், அண்ணாமலை பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அமித்ஷா கூறியதாக சொல்லப்படுகிறது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து, இன்று வரை ஓபிஎஸ்சை இணைத்துக் கொள்ளுங்கள் என்ற நிலைப்பாட்டில்தான் பாஜக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த ஈபிஎஸ் தரப்பினர், இது எங்கள் உட்கட்சி விவகாரம் என்றும், இதில் நீங்கள் (பாஜக) தலையிட வேண்டாம் என்றும் கூறி வந்தனர். மேலும் பிரதமர் மோடி எப்போது தமிழ்நாட்டுக்கு வருகை தந்தாலும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் தனியாக சந்திக்க நேரம் கேட்பது வழக்கம். ஆனால் வரவேற்பு, வழியனுப்பு நிகழ்வில் மட்டுமே இரண்டு பேரும் கலந்து கொள்வார்கள்.