சென்னை:தஞ்சாவூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் சசிகலா கலந்து கொள்ளாதது மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைய சசிகலா விரும்பவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பொதுக்குழு மூலம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் சென்ற ஓபிஎஸ்சுக்கு இறுதியில் தோல்வியே கிடைத்தது. இதனால், அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர்களுடன் கைகோர்க்க ஓபிஎஸ் நினைத்ததாக தெரிகிறது.
மேலும், 2017ஆம் ஆண்டு முதல் எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஓபிஎஸ் தரப்பினர் தற்போது இறங்கியுள்ளனர். இதற்கு, சாட்சியமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் கைகோர்த்தார்.
2017ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், தற்போது எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதற்கு அதே குடும்பத்துடன் கைகோர்த்து விட்டார் என்றும், எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதற்கு ஓபிஎஸ்சுக்கு வேறு வழியில்லை என்றும் விமர்சனம் அனல் பறக்கிறது.
டிடிவி தினகரனைத் தொடர்ந்து சசிகலாவுடன் கைகோர்க்க நினைத்த ஓபிஎஸ்சின் திட்டம் தற்போது வரை கானல் நீராகவே உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேநேரம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளில் தொடர் தோல்விகளை சந்தித்த ஓபிஎஸ், தனது செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் மாநாடு நடத்தினார்.
இந்த மாநாட்டில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அப்போதே ஓபிஎஸ்சுடன் சசிகலா கைகோர்க்க விரும்பவில்லை என அரசியல் மேடையில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், சசிகலாவுடன் கைகோர்க்க ஓபிஎஸ் தரப்பினர் தொடர் முயற்சிகளில் இறங்கினர்.
அதிமுக மீண்டும் இணைய திருமணம் உதவுமா?இந்த நிலையில்தான் ஓபிஎஸ்சின் வலது கரமாக இருக்கும் வைத்திலிங்கத்தின் மகன் திருமணம் தஞ்சாவூரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்பட்டபோது, சசிகலாவை அதிமுகவில் இணைக்க வைத்திலிங்கம் பலமுறை முயற்சி செய்தார்.
வைத்தியலிங்கத்தின் மகன் திருமண நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதன் அடிப்படையில் வைத்திலிங்கம் மகன் திருமணத்தின் மூலம் சசிகலாவுடன் ஓபிஎஸ் கைகோர்க்க நினைத்தார். இந்த திருமணத்திற்கு ஓபிஎஸ்சின் கட்டளையை ஏற்று சசிகலாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தஞ்சாவூரில் வைத்திலிங்கத்தின் மகன் திருமணம் நேற்று (ஜூன்7) ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.
டிடிவி தினகரன் வருகை தந்த நிலையில் சசிகலா கலந்து கொள்ளாதது மூவரும் இணைய உள்ளதாக நினைத்துக் கொண்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவே கருதப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் ஒன்றிணைந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு சவாலாக அமையும் என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினருடைய பெருத்த எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆதரவாளர்களின் பார்வையில்:வைத்திலிங்கம் மகன் திருமணத்திற்கு சசிகலா ஏன் வரவில்லை என அவரது ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, “வைத்திலிங்கம் மகன் திருமணத்திற்கு சசிகலாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் டிடிவி தினகரனை சந்தித்து அழைப்பு விடுத்த வைத்திலிங்கம், பிறகு சசிகலாவிற்கு அழைப்பு விடுத்ததில் அவருக்கு வருத்தம்.
ஆனால், திருமணத்திற்கு வர இயலாது என்று அப்போது வைத்திலிங்கத்திடம் சசிகலா கூறினார். திருமணம் முடிந்த பிறகு தஞ்சாவூர் வரும்போது ஒருநாள் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறி வைத்திலிங்கத்தை சசிகலா அனுப்பி வைத்துள்ளார். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் சசிகலாவின் எண்ணம்.
ஆனால், ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட சசிகலா விரும்பவில்லை. 2017ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதன் காரணமாகவே சசிகலா சிறை சென்றார். சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதனையடுத்து பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து அதிமுகவை எதிர்க்க சசிகலா விரும்பவில்லை. முடிந்த அளவிற்கு அனைவரையும் ஒருங்கிணைத்து பார்ப்போம், இல்லையென்றால் இப்படியே இருந்து விடலாம் என்று சசிகலா நினைக்கிறார். ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்தால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வட்டத்தில் தன்னை சுருக்கி விடுவார்கள் என்று வைத்திலிங்கத்தின் மகன் திருமணத்தை சசிகலா தவிர்த்துள்ளார்.
ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல் சசிகலாவுடன் இணைய நினைக்கிறார். சிறையில் இருந்து வந்தபோது சசிகலாவை அதிமுகவில் இணைக்க ஓபிஎஸ் முயற்சி செய்திருந்தால், அவரை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், தன்னுடைய பதவி பறிபோனதால் தற்போது அனைவரையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை” எனக் கூறினார்.
பத்திரிக்கையாளரின் பார்வையில்:மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், “திருச்சியில் நடந்த ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. வைத்திலிங்கம் மகன் திருமணத்திலும் சசிகலா கலந்து கொள்ளவில்லை. இதை வைத்து பார்க்கும்போது ஓபிஎஸ்சுடன் இணைய சசிகலாவிற்கு விரும்பம் இல்லை என்று தெரிகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைப்பதே என்னுடைய கடமை என்று சசிகலா கூறியுள்ளார்.
அதனால், திருமணத்திற்குச் சென்று குறுகிய வட்டத்திற்குள் சிக்கி விடக் கூடாது என சசிகலா நினைத்திருக்கலாம். ஆனால், சசிகலாவுடன் கைகோர்க்க ஓபிஎஸ் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கும் கருத்து முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், முதலில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் கைகோர்த்துள்ளதால், இவர்களோடு இணைய சசிகலா தயக்கம் காட்டுகிறார்.
ஒரு வேளை இவர்கள் ஒன்றிணைந்தாலும் யார் தலைமைப் பொறுப்பில் அமர்வது என்ற சிக்கலும் உள்ளது. மேலும், மூவரும் ஒன்றிணைந்தால் அது திமுகவிற்கு சாதகமாக அமையும் என்பது சசிகலாவிற்கு நன்றாகத் தெரியும். இதையெல்லாம் யோசனை செய்துதான் வைத்திலிங்கம் மகன் திருமணத்திற்கு சசிகலா செல்லாமல் இருந்திருக்கலாம்” என கூறினார்.
இதையும் படிங்க:சென்னையில் ரூ.1000 கோடி நிலம் மீட்பு; 33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்