சென்னை: பாஜக - அதிமுகவின் கூட்டணி மோதல் விவகாரம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே அதிமுக - பா.ஜ.க கூட்டணியில் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில், தற்போது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்றினால் மட்டும்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி குறித்து பேச முடியும். அப்படி இல்லையென்றால், கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருவதாக அதிமுக தலைமை வட்டாரங்கள் கூறுகின்றன.
கருத்தால் வெடித்த மோதல்: கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பொதுவெளியில் பேசியிருந்தார். இதற்கு அன்றைய தினமே அதிமுக தரப்பில் இருந்தும், முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மேலும், தி.மு.க தரப்பிலும் அண்ணாமலையின் கருத்திற்கு எதிர் கருத்துகள் வரத் தொடங்கின.
தற்போது இந்த கருத்து மோதல் என்பது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்றுதான் கூற வேண்டும். “முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர்தான் அண்ணா” என அண்ணாமலை பேசியதற்கு தி.மு.க தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அண்ணா மட்டும் இல்லை என்றால் அண்ணாமலை ஒரு காவல் துறை உயர் அதிகாரியாக மாறியிருக்க முடியாது. இன்று ஒரு கட்சிக்கு மாநிலத் தலைவராக இருந்திருக்க முடியாது. மாறாக அவர் எங்கேயாவது ஆடுதான் மேயத்துக் கொண்டிருப்பார்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடுமையான சொற்களை எனக்கும் பயன்படுத்த தெரியும் எனவும், 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை என் கை எனவும், சி.வி.சண்முகம் தனக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, 6 மணிக்கு மேல் ஒரு மாதிரியும் 6 மணிக்கு முன் ஒரு மாதிரியும் பேசக் கூடியவர்களுக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது என அண்ணாமலை தெரித்திருந்தார்.
மேலும், தான் ஒன்றும் தவறான கருத்துக்களையோ அல்லது வரலாற்றை திரித்தோ பேசவில்லை, வரலாற்றில் உள்ளதை அப்படியே பதிவிட்டேன் எனவும், இதற்கு தான் மன்னிப்பும் கேட்க முடியாது எனவும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். மேலும், “பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் என்னை தமிழகத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவராக நியமித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க நான் வரவில்லை” எனவும் அவர் கூறிய கருத்துக்கள் தொடர்ந்து இந்த அதிமுக - பா.ஜ.க பிரச்னையை இழுத்துக் கொண்டே செல்கிறது.
மேலும், ஊழல் செய்து சிறைக்குச் சென்றவர்தான் ஜெயலலிதா என அண்ணாமலை முன்பு பேசியதற்கே கருத்து வேறுபாடுகள் தொடங்கிய நிலையில், தற்போது மேலும் அதற்கு வலுவூட்டும் விதமாகத்தான் அண்ணாமலை, அண்ணா குறித்து பேசியது தற்போது மாறியுள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்த தலைவர்கள் போலத்தான் நானும், எனக்கும் உடனடி முடிவுகளெல்லாம் எடுக்கத் தெரியும். அப்படி எடுத்தால் என்ன நடக்கும் என்பது எனக்கும் தெரியும்.
அது போன்ற தலைவன் நான் இல்லை. இதற்கு முன்பு கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர்கள் எடுத்த தவறான முடிவுகள் காரணமாக கட்சியிலிருந்து எவ்வளவு நபர்கள் வெளியில் சென்றிருப்பார்கள் என அவர்களின் கட்சியினருக்குத் தெரியும். நான் அது போன்ற தலைவன் இல்லை எனவும் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை மேலும் எரிச்சல் ஊட்டும் வகையில் அமைந்தது. இப்படி இந்த கருத்து மோதல் விவகாரத்தால் தற்போது கூட்டணி தொடருமா அல்லது முடிவுறுமா என்ற நிலையில் வந்து நிற்கிறது.