சென்னை:அண்ணா நகர் பகுதியில் பிப்ரவரி 13ஆம் தேதி நள்ளிரவு அதிவேகமாக வந்த இரு கார்களில், ஒரு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது ஏறி அண்ணா நகர் டவர் இரண்டாவது அவென்யூ சிக்னல் அருகே உள்ள பல்பொருள் அங்காடியின் முகப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நடைபாதையில் கடை வைத்திருந்த வியாபாரி வாசிம் ஆலம் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருமங்கலம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநரான அண்ணா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தின் சிசிடிவி காட்சி மது அருந்தவில்லை
விசாரணையில்தான் அண்ணா நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திவிட்டு காரை எடுக்க வந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, தனது கார் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்றதால், அந்தக் காரை துரத்தி காரில் வேகமாகச் சென்றதாக ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், துரத்திச் சென்றபோது முன்னால் சென்ற கார் யூ-டர்ன் அடித்து சாலையின் மறுபுறம் வந்த வழியே திரும்பிச் சென்றதால் தானும் தனது காரை திருப்ப முயன்று கியருக்குப் பதிலாக ஹேண்ட் பிரேக்-ஐ இழுத்ததாகவும், அதனால் கார் தனது கட்டுப்பாட்டை மீறி மறுபுறம் திரும்பி நடைபாதை மீது ஏறி பல்பொருள் அங்காடி முகப்பில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தும், சம்பவ இடத்தில் விபத்தை நேரில் பார்த்தவர்களை விசாரித்தும் ராஜேஷ் மது அருந்தி வாகனம் ஓட்டவில்லை என்பதையும், வாக்குமூலத்தில் ராஜேஷ் குறிப்பிட்டது அனைத்தும் உண்மை எனக் கண்டறிந்துள்ளதாகவும் காவல் துறைத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கார்! சிசிடிவி காட்சிகள்